05>நோன்பாளியின் சந்தேகங்கள்
15.07.2012
சந்தேகம் :- குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாமா?
தெளிவு :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாம். தொழுகைக்காக மாத்திரம் அவர் குளித்துக் கொண்டால் போதுமானது. இது பற்றி அன்னை ஆயிஷா(ث), உம்மு ஸல்மா(ث) ஆகியோர் கூறும் போது, “நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பும் நோற்பார்கள்” என அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: தாரமீ-1725, புஹாரி-1925, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா- 1704, முஅத்தா-644,645)
சந்தேகம்: நோன்பாளி ஒருவர் பகலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது “இஹ்திலாம்” ஏற்பட்டு (கனவில் விந்து வெளிப்பட்டு) விட்டால் அவரின் நோன்பு முறிந்து விடுமா? தெளிவு :-
உறக்க நிலையில் ஒருவர் முழுக்காளியாவதால் நோன்பு முறிந்து விடாது. அவர் தொடர்ந்து அந்நோன்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், “கனவின் மூலம் முழுக்காளியானவர் நோன்பை விட்டுவிட வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்:பாகம்-1:பக்:554)
சந்தேகம் :- “ஸஹர்” உடைய முடிவு நேரம் எது?
தெளிவு :-
சுப்ஹுடைய தொழுகைக்காக கூறப்படும் இரண்டாவது அதான் வரையிலும் உண்ணல், குடித்தல், எதுவும் தடுக்கப்படடதல்ல; சுப்ஹுடைய அதான் கூறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னரே ஸஹருடைய நேரம் முடிந்து விட்டது என்ற கருத்து தவறானதாகும். ஏனெனில் “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என நபி() அவர்கள் ஏவியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆராதம்: இப்னு குஸைமா 1932)
சந்தேகம் :
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போதே சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் அவர் தொடர்ந்து உண்ணலாமா? அல்லது உண்ணாமலே பட்டினி நோன்பு இருக்க வேண்டுமா?
தெளிவு :-
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.
“தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)
சந்தேகம் :
நோன்பாளி பகல் வேளைகளில் பல் துலக்குவதால் நோன்பின் பலன் குறைந்து விடுமா?
தெளிவு :-
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கின்ற போது என்னால் கணிப்பிட முடியாது என்கின்ற அளவுக்கு அதிகமாக பல்துலக்க நான் கண்டேன்” என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) கூறினார்கள். (புஹாரி:1933, அபூ தாவூத், திர்மிதி:721)
சந்தேகம் :-
நோன்பாளி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன் மனைவியை முத்தமிட்டுவிட்டார். இப்போது இவரது நோன்பின் நிலை என்ன? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)
Subscribe to:
Comments (Atom)

No comments:
Post a Comment